×

இரண்டு கைகளை தட்டி அழகாக சிரிக்கும் என் குழந்தை கையை இழந்துவிட்டானே… கை அகற்றப்பட்ட குழந்தையின் தாய் அஜீஸா கண்ணீர்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர் – அஜீஸா தம்பதிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தேவக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குறை பிரசவம். எடை 1.5 கிலோ இருந்தது. 3 மாதத்திற்கு பிறகு குழந்தையின் தலை சுற்றளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த மே 5ம் தேதி சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அஜீஸா குழந்தையை கொண்டு வந்து சேர்த்தார். பிறகு மேல் சிகிச்சைகாக ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட, குழந்தைக்கு வென்ட்ரிகுலோபெரிடோனியல் (VP) ஷன்ட் மூலம் தலையில் உள்ள நீரை வயிற்று பகுதியில் இணைத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டது. மேலும், வென்ட்ரிகுலோபெரிடோனியல் (VP) ஷன்ட் ஆசனவாய் வழியாக வெளியேறியது.

இதை தொடர்ந்து மீண்டும் குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பொருத்திவிட்டனர். பிறகு தான் மருந்து, திரவ உணவு ஏற்றுவதற்காக குழந்தையின் வலது கையில் பொருத்தப்பட்ட ஊசியின் காரணமாக, கை அழுக ஆரம்பித்துள்ளது. குழந்தையின் விரல் நுனியில் தோல்கள் உரிய ஆரம்பித்துள்ளன. குழந்தையின் கையில் ரத்த ஓட்டம் இல்லாமல் போனது தெரியவந்தது. ரத்த உறை ஏற்பட்டு அது ரத்த குழாய் அடைப்பாக மாறியுள்ளதை கண்டறிந்தனர். இதனையடுத்து தான், மருத்துவர்கள் குழந்தையின் கையை அகற்றும் முடிவிற்கு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறுகையில், ‘‘அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த குழந்தைக்கு மருந்துகள் நரம்புகள் வழியாக கொடுக்கப்பட்டது. குழந்தையின் ரத்த ஓட்டம் குறைவாக இருந்ததால் குழந்தையின் கை நிறம் மாறி உள்ளது. கை பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளது என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தார்கள். அதனை சரிசெய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்ற எண்ணத்தில் 3 பேர் கொண்ட குழு மூலம் அந்த கை அகற்றப்பட்டது’’ என்றார்.

குழந்தையின் தாய் அஜீஸா கூறுகையில், ‘‘என் மகனுக்கு நடந்ததுபோல எந்த ஒரு குழந்தைக்கும் அநீதி நடைபெறக்கூடாது. என் மகனின் கை போக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியமே காரணம். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். ஊசி போடுவதற்கு முன்பு என்னுடைய குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன், விளையாடுவான், சிரிப்பான், இரண்டு கைகளை தட்டி குறும்பு தனம் செய்வது, அவனே பால் புட்டியை எடுத்து அருந்துவான். இனி நான் அதனை எப்போது காண்பேனோ. என் மகனுக்கு தேவையான அனைத்து விஷயங்களுக்கும் நான் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

* 61 செ.மீ அளவிற்கு அதிகரித்த தலை
குழந்தை குறை பிரசவத்தில் பிறந்த பின்னர், 3 மாதங்களுக்கு பிறகு குழந்தையின் தலை அளவு அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக, ஒரு குழந்தை பிறந்த பின்னர் 3 மாதத்தில் தலையின் வளர்ச்சி என்பது 37 செ.மீ இருக்கும். ஆனால், அஜீஸாவின் குழந்தையின் தலையின் சுற்றளவு 61 செ.மீ அதிகரித்துள்ளது.

* பெற்றோரிடம் மருத்துவ குழு விசாரணை
தஸ்தகீர்-அஜீஸா தம்பதியின் ஒன்றரை வயது மகனுக்கு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சுமார் 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர், வலது கை மூட்டுப் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது. இந்நிலையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தபோது, அலட்சியமாக செயல்பட்டதே கை பறிபோனதற்குக் காரணமென்று பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக, விசாரிக்க 3 மருத்துவர்கள் கொண்ட குழுவை சுகாதாரத்துறை அமைத்து நேற்று விசாரணையை தொடங்கினர். இதற்காக, குழந்தையின் பெற்றோர் தஸ்தஹீர் மீரான், அஜீஸா மருத்துவ குழு முன்னிலையில் உரிய ஆவணங்களுடன் நேற்று ஆஜராகினர். சுமார் 3 மணி நேரம் பெற்றோரிடம் விசாரணை நடந்தது. மேலும் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரையும் மருத்துவக் குழு விசாரிக்க உள்ளது.

The post இரண்டு கைகளை தட்டி அழகாக சிரிக்கும் என் குழந்தை கையை இழந்துவிட்டானே… கை அகற்றப்பட்ட குழந்தையின் தாய் அஜீஸா கண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Aziza ,Chennai ,Dastagir ,Ramanathapuram district ,Devakottai ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...